search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக சுகாதார அமைப்பு"

    • கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒமைக்ரானின் புதிய வகையான எக்ஸ்.பி.பி.1.16 வகை திரிபு பரவ தொடங்கி உள்ளது.
    • முதலில் அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் உள்ளிட்ட 14 நாடுகளில் காணப்பட்ட எக்ஸ்.பி.பி. வகை திரிபு பின்னர் இந்தியாவிலும் பரவ தொடங்கியது.

    புதுடெல்லி:

    கடந்த 2020-ம் ஆண்டு சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா ஏராளமான உயிர்களை காவு வாங்கியது. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

    இதனால் உலகம் முழுவதும் பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பொருளாதார முடக்கம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகள் நடத்தி தொற்று பரவலை தடுக்க தடுப்பூசிகளை கண்டுபிடித்தனர். அவை பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதின் விளைவாக தொற்று பரவல் படிப்படியாக கட்டுக்குள் வந்தது. இதனால் உலகம் முழுவதும் சகஜநிலை திரும்பியது.

    இருப்பினும் அவ்வப்போது கொரோனா உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் மாறுபாடு, அதன் பல்வேறு திரிபுகள் என பல வகைகளில் உருமாறி பரவிய வண்ணம் உள்ளது.

    இதனால் சில நாடுகளில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒமைக்ரானின் புதிய வகையான எக்ஸ்.பி.பி.1.16 வகை திரிபு பரவ தொடங்கி உள்ளது. முதலில் அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் உள்ளிட்ட 14 நாடுகளில் காணப்பட்ட எக்ஸ்.பி.பி. வகை திரிபு பின்னர் இந்தியாவிலும் பரவ தொடங்கியது.

    இதனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வரை கொரோனா தினசரி பாதிப்பு 200-க்கும் கீழ் இருந்த நிலையில் தற்போது 3 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது.

    குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா மீண்டும் அதிகரிக்க எக்ஸ்.பி.பி. வகை வைரஸ் பரவலை காரணம் என தெரியவந்துள்ளது.

    எக்ஸ்.பி.பி. வைரஸ் என்பது ஒமைக்ரானின் பிறழ்வு வைரஸ்களில் இருந்து உருமாறிய வைரஸ்களாகும். அதாவது பி.ஏ.2.10.1, பி.ஏ.2.75, எக்ஸ்.பி.எப்., பி.ஏ.5.2.3 மற்றும் பி.ஏ.2.75.3 வகை வைரஸ்களில் மறு வடிவம் என கூறப்படுகிறது.

    இந்த புதிய வகை வைரஸ்களின் மரபணு மாற்றத்துடன் எக்ஸ்.பி.பி.1.16 என்ற வைரசும் பரவி வருவதால் தான் இந்தியாவில் பரவி வருகிறது.

    குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, குஜராத் மட்டுமல்லாது தெலுங்கானா, அரியானா, இமாச்சலபிரதேசம், ஒடிசா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எக்ஸ்.பி.பி.1.16 வகை வைரஸ் பரவல் இருப்பது ஆய்வில் உறுதியாகி உள்ளது.

    இந்த வகை எக்ஸ்.பி.பி.1.16 வகை வைரஸ் வேகமாக பரவ கூடியதாக உள்ளது. சாதாரணமாக தும்மல் போட்டாலே இது மிக எளிதாக மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என கூறப்படுகிறது.

    மேலும் எக்ஸ்.பி.பி.1.16 வைரஸ் என்பது எக்ஸ்.பி.பி.1.15 வகை வைரசை விட அதிக வீரியத்துடன் உள்ளது. கடந்த மாதம் நிலவரப்படி இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 30 சதவீதம் பேருக்கு எக்ஸ்.பி.பி.1.16 வகை வைரஸ் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஒமைக்ரானின் மறுவடிவமாக கருதப்படும் இந்த வகை வைரஸ் வேகமாக பரவினாலும் கூட ஒமைக்ரானை போல பயப்படும் அளவிற்கு மோசமான நிலையை ஏற்படுத்தாது என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    உலகளவில் கடந்த பிப்ரவரி 27-ந்தேதி முதல் மார்ச் 26-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதற்கு எக்ஸ்.பி.பி.1.16 வகை புதிய ஒமைக்ரான் மாறுபாடுதான் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது.

    ஆனால் இந்த வகை தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலையோ அல்லது இந்த வகை தொற்றால் அதிக உயிரிழப்புகளோ இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    இந்த வகை வைரஸ்கள் அதிக வீரியம் கொண்டதாக இல்லை. மேலும் இவ்வகை தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு 3 நாளில் குணமாகி விடுகிறார்கள். அதே நேரம் சாதாரண தும்மல் மூலமாக கூட அடுத்தவர்களுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருப்பது அவசியம் எனவும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளுக்கும் பரவியது
    • கொரோனா தொடர்பான தரவுகளை சீனா தொடர்ந்து மறைத்து வருவதாக குற்றச்சாட்டு நீடிக்கிறது.

    ஜெனீவா:

    சீனாவின் வுகான் நகரில் 2019 டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்த தொற்று இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியது

    இதற்கிடையே, கொரோனா பெருந்தொற்று தனது நாட்டில் வெளிப்பட்டது தொடர்பான தரவுகளை சீனா தொடர்ந்து மறைத்து வருவதாக குற்றச்சாட்டு நீடிக்கிறது.

    கொரோனாவின் ஆரம்ப காலத்தில் வுகான் நகரத்தில் ஹுவானன் சந்தைதான் தொற்றின் மையமாக விளங்கியது. ஆனால் அங்கிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தொடர்புள்ள தரவுகளை சீனா வெளிப்படையாக வெளியிடவில்லை. இதை உலக சுகாதார அமைப்பு கண்டித்துள்ளது.

    இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான ஒவ்வொரு தரவுகளும் உடனடியாக சர்வதேச சமூகத்துடன் பகிரப்பட வேண்டும். இந்தத் தரவுகள் 3 ஆண்டுக்கு முன்பே பகிரப்பட்டிருக்க வேண்டும். தரவுகளைப் பகிர்ந்து கொள்வதில் சீனா வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுக்கிறோம் என தெரிவித்தார்.

    • கொரோனா தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
    • அறிகுறி இல்லாதவர்களுக்கு 5 நாள் போதும்.

    ஜெனீவா :

    உலக சுகாதார அமைப்பு, கொரோனா தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டால், 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது. அறிகுறி இல்லாவிட்டால், 5 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

    தனிமைப்படுத்தும் காலத்தை குறைக்க விரைவு ஆன்டிஜென் பரிசோதனை செய்யுமாறும் தெரிவித்துள்ளது.

    • மரியான் பயோடெக் நிறுவனத்தின் டோக்-1 மேக்ஸ் மற்றும் அம்ப்ரோனால் ஆகிய இரண்டு இருமல் மருந்துகளையும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வு குழு பரிசோதித்தது.
    • இரண்டு இருமல் மருந்துகளிலும் அளவுக்கு அதிகமான எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஜெனீவா:

    உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்தியாவை சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் இருமல் மருந்தை எடுத்து கொண்ட 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியது. அந்த மருந்தில் எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

    இதையடுத்து உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் செயல்படும் மரியான் பயோடெக் நிறுவனத்தின் டோக்-1 மேக்ஸ் மற்றும் அம்ப்ரோனால் ஆகிய இரண்டு இருமல் மருந்துகளையும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வு குழு பரிசோதித்தது. இதில் இரண்டு இருமல் மருந்துகளிலும் அளவுக்கு அதிகமான எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த மருந்துகள் குழந்தைகளுக்கு பயன்படுத்துவதற்கு உகந்ததல்ல என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த மருந்துகளை தரமற்றது என்று அறிவித்துள்ளது. எனவே இந்த இருமல் மருந்துகளின் பயன்பாட்டை கைவிடுமாறு உலக நாடுகளை கேட்டுக்கெண்டுள்ளது. ஏற்கனவே மரியான் பயோடெக் நிறுவனத்தின் அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீனாவில் தொற்று பரவல் மிகவும் அதிகரித்துள்ளது.
    • அங்கிருந்து வரும் தரவுகள் முழுமையாக இல்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

    ஜெனீவா:

    சீனாவில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகள் தங்கள நாட்டில் இந்த தொற்று மீண்டும் எழுச்சி பெற்று விடக்கூடாது என கருதி முன் எச்சரிக்கையாக கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

    சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் கொரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயம் ஆக்கி உள்ளன. இதை உலக சுகாதார நிறுவனம் நியாயப்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஜெனீவாவில் காணொலிக் காட்சி வழியாக பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், சீனாவில் தொற்று பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. அங்கிருந்து முழுமையான தரவுகள் இல்லை. இந்த நிலையில் சில நாடுகள் தங்கள் குடிமக்களைப் பாதுகாக்கும் என்று நம்பி எடுக்கிற நடவடிக்கைகள் சரியானவை, புரிந்துகொள்ளத் தக்கவை என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலக நாடுகள் அனைத்திலும் உஷார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
    • இந்தியா, இத்தாலி, தென்கொரியா, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

    நியூயார்க்:

    சீனாவில் உருமாறிய புதிய வகை கொரோனா பி.எப்.-7 மிக வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளன. கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. கொரோனாவால் தினமும் ஏராளமானோர் பலியாகி வருவதாகவும் இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்ய ஆம்புலன்சு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையடுத்து உலக நாடுகள் அனைத்திலும் உஷார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இந்தியா, இத்தாலி, தென்கொரியா, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இந்த நிலையில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வருவதற்கு உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறியதாவது:-

    சீனாவில் கொரோனா பரவலின் எழுச்சியால் உலக சுகாதார அமைப்பு கவலை அடைந்து உள்ளது. சீனாவில் நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு சில நாடுகள் அறிமுகப்படுத்தி உள்ள கட்டுப்பாடுகள் புரிந்து கொள்ள கூடியது.

    சீனாவில் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து விளக்கம் அளிக்க அந்நாடு முன்வர வேண்டும். இது குறித்தான விரிவான தகவல்கள் எங்களுக்கு தேவை. நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் தொடர்ந்து கண்காணிக்கவும் தடுப்பூசி போடவும் சீனாவை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம்.

    மருத்துவ பராமரிப்பு அதன் சுகாதார அமைப்பை பாதுகாப்பதற்கான எங்கள் ஆதரவை நாங்கள் சீனாவுக்கு தொடர்ந்து அளித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தடுப்பூசி செலுத்துவதில் சீனா கவனம் செலுத்த வேண்டும்.
    • சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

    ஜெனீவா:

    சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் புதுவகை கொரோனா பரவலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.

    இந்தியாவிலும் ஆலோசனை கூட்டம் நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்ற உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரயஸ், சீனா தடுப்பூசிகள் போடுவதை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், தற்போது சில நாடுகளில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது. சீனாவில் உள்ள நிலைமை கவலை அளிக்கிறது. சீனாவின் கொரோனா பாதிப்பு பற்றிய விபரங்களை பகிர்ந்து ஆய்வுகள் செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தடுப்பூசி செலுத்துவதில் சீனா கவனம் செலுத்தவேண்டும். சீனாவுக்குத் தேவையான உதவிகளை செய்ய உலக சுகாதார நிறுவனம் தயாராக உள்ளது என தெரிவித்தார்.

    • சர்வதேச சுகாதார அவசரநிலை தேவைப்படுகிறதா என்பதை தீர்மானிக்க ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
    • கடந்த வாரம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது.

    ஜெனீவா:

    சீனாவின் உகான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டின் இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. தற்போது அந்த பாதிப்புகளில் இருந்து சர்வதேச நாடுகள் படிப்படியாக மீண்டு வருகின்றன. இதுவரை உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் சுமார் 66 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு இன்னும் சர்வதேச சுகாதார அவசரநிலை தேவைப்படுகிறதா என்பதை தீர்மானிக்க உலக சுகாதார அமைப்பு சார்பில் சில மாதங்களுக்கு ஒருமுறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

    அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் பேசுகையில், 2023-ம் ஆண்டில் நாம் சந்திக்க வேண்டிய சவால்கள் நிறைய இருப்பதாகவும், எதிர்காலத்தில் கொரோனா போன்ற நோய்த்தொற்று பரவல்களை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்கவேண்டும் என்பதே நாம் கற்க வேண்டிய பாடம் என்றும் கூறினார்.

    கடந்த வாரம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ள நிலையில், வரும் 2023-ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவலை உலகளாவிய அவசரநிலையாக கருதவேண்டிய அவசியம் இருக்காது என டெட்ரோஸ் அதனோம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    அதேசமயம், கொரோனா வைரசின் தோற்றத்தை நன்கு புரிந்துகொள்வதற்காக, நாங்கள் கேட்டுள்ள தரவுகளை பகிர்ந்துகொள்ளவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும் சீனாவிடம் தொடர்ந்து கூறிவருவதாக டெட்ரோஸ் கூறினார்.

    • குரங்கு அம்மை என்ற பெயரை உலக சுகாதார அமைப்பு எம்பாக்ஸ் என மாற்றியுள்ளது.
    • உலகளாவிய மருத்துவ நிபுணர்களின் தொடர்ச்சியான ஆலோசனையை தொடர்ந்து இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    ஜெனிவா:

    டென்மார்க்கில் 1958-ம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்கு ஒருவித வைரசால் பாதிப்புக்கு ஆளானது. இதனால் அந்த வைரஸ் நோய்க்கு குரங்கு அம்மை என பெயர் வந்தது. பின்னர் இந்த நோய் தாக்கம் மனிதர்களுக்கும் கண்டுபிடிக்கப்பட்டது.

    தற்போது குரங்கு அம்மை என்ற பெயரை உலக சுகாதார அமைப்பு எம்பாக்ஸ் என மாற்றியுள்ளது. உலகளாவிய மருத்துவ நிபுணர்களின் தொடர்ச்சியான ஆலோசனையை தொடர்ந்து இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    • உலகம் முழுவதும் கொரோனோ தொற்றால் ஏற்படும் மரணங்கள் குறைந்து வருகிறது.
    • 2020 மார்ச் மாதத்தை விட தற்போது பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.

    ஜெனீவா:

    கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கி விட்டது. ஏராளமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உருமாறி உலக மக்களை இன்னும் அச்சுறுத்தி வருகிறது.

    இந்தியாவையும் இந்த கொரோனா விட்டு வைக்கவில்லை. தினமும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வரும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் டெட் ரோஸ் அதானோம் கூறியதாவது:-

    உலகம் முழுவதும் கொரோனோ தொற்றால் ஏற்படும் மரணங்கள் குறைந்து வருகிறது. 2020 மார்ச் மாதத்தை விட தற்போது பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. கொரோனா இன்னும் முற்றிலும் முடியவில்லை. ஆனால் அதன் முடிவு நமக்கு எட்டும் தூரத்தில் தான் உள்ளது. இந்த வாய்ப்பை நாம் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அதிக வைரஸ் மாறுபாடுகள், இறப்புகள் அதிகரிப்பதற்கான நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் அதிகமாக பரவி வருகிறது.
    • இந்தாண்டு 10 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

    ஜெனீவா:

    கொரோனா வைரஸ் தொற்று உருவாகி இரண்டரை ஆண்டுகளைக் கடந்தும், அந்த வைரஸ் இன்னும் முழுமையாக ஓயவில்லை. பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் அதிகமாக பரவி வருகிறது.

    இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் பேர் பலியாகி உள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்துக் கருவிகளையும் வைத்திருக்கிறோம். தற்போது இந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துமாறு அனைத்து அரசாங்கங்களையும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொரோனாவுடன் வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 15 ஆயிரம் பேர் கொரோனாவால் இறந்து உள்ளனர்.
    • கொரோனா பரவல் குறைந்தாலும் கடந்த 4 வாரங்களில் இறப்பு விகிதம் 35 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

    வாஷிங்டன்:

    கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரவல் பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி போன்ற தடுப்பு நடவடிக்கைகளால் தற்போது இதன் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

    இதனால் கொரோனா விதிமுறைகளை மறந்து பொதுமக்கள் சகஜ நிலைக்கு திரும்பி விட்டனர். கொரோனாவுடன் வாழ பழகி விட்டனர்.

    கடந்த வாரம் 54 லட்சம் பேரை கொரோனா தாக்கி உள்ளது. இது அதற்கு முந்தையை வாரத்தை விட 24 சதவீதம் குறைவு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

    உலகில் எல்லா இடங்களிலும் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

    ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் கிட்டத்தட்ட 40 சதவீதமும் மத்திய கிழக்கு நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

    இறப்புகளும் குறைய ஆரம்பித்து இருக்கிறது. ஆனாலும் ஆசியாவில் ஒரு சில பகுதிகளில் இன்னும் சாவு எண்ணிக்கை சற்று அதிகமாகதான் உள்ளது.

    இது தொடர்பாக உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ் கூறியதாவது:-

    கொரோனாவுடன் வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 15 ஆயிரம் பேர் கொரோனாவால் இறந்து உள்ளனர். கொரோனா பரவல் குறைந்தாலும் கடந்த 4 வாரங்களில் இறப்பு விகிதம் 35 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கொரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை. இதனால் பொதுமக்கள் இதுவரை கடைபிடித்து வந்த முக கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற நடவடிக்கைகளை கைவிடக்கூடாது.

    இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் உடனே அதனை போட்டுக்கொள்வது நல்லது. 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இது நம்மை மட்டுமல்ல சுற்றி உள்ளவர்களையும் பாதுகாக்கும்.

    இவ்வாறு அவர் தெரி வித்து உள்ளார்.

    ×